கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள்

-கார்த்திக் குருமூர்த்தி

  • நாம் பழகும் மனிதர்கள், வாசிக்கும் புத்தகங்கள், பார்க்கும் திரைப்படங்கள், செல்லும் இடங்கள் என எல்லாவற்றில் இருந்தும் எதேனும் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும்.
  • யாரேனும் நமது தவறுகளை, நமது குறைகளை நம்மிடம் சுட்டிக் காட்டினால், “நீ எப்படி சொல்லலாம்?” என்று சண்டைக்கு செல்லாமல் சுயபரிசோதனை செய்வது அவசியம். நம்மிடம் இருக்கும் தவறை நம் மனதில் ஒப்புக் கொள்வது அதை விட அவசியம். அந்த தவறை அல்லது குறையை திருத்தி கொள்ள முயற்சி செய்வது மிக மிக அவசியம்.
  • என்ன நடந்தாலும் அதை தைரியமாக எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையை எண்ணி பயம் கொள்வது, அழுவது, போன்றவை ஒருபோதும் அந்த பிரச்சனையை சரி செய்ய போவதில்லை என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதிகமான கோபத்திலும் கூட வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில சமயங்களில் நமது நாக்கு நமது மூளையின் பேச்சை கேட்காமல் வார்த்தைகளை வெளிவிட்டு விட்டால் மனமுவந்து அதற்காக மன்னிப்பு கேட்டு விடுவதில் தவறு ஒன்றும் இல்லை.
  • கடந்த காலத்தின் மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் மூளையின் நினைவு பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.
  • பண்புள்ள மனிதர்கள் யாரும் பிறரை பற்றி புறம் பேச மாட்டார்கள். யாரேனும் உங்களை பற்றி புறம் பேசினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். பண்பில்லாதவர் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை.
  • பிறரது மனம் புண்படும்படி சுடு சொற்களையும், இழி சொற்களையும் கூறக்கூடாது.
  • ஒருவர் நமக்கு துன்பம் தரும் செயலை செய்திருந்தாலும் அதனை மறந்து மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உறவினர்கள் எவரேனும் நமக்கு கெடுதல் செய்யும் விதமாக நடந்து கொண்டிருந்தாலும் நாம் அதனைப் பெரிது படுத்தக்கூடாது.” குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”— என்பது பழமொழி.
  •  எந்தவொரு வேலையை முடித்த பிறகும், அதில் அறிந்த பாடங்களை பதிவு செய்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல எந்த வழி சிறந்தது என்று ஒருமுறை கிடைக்கும் அனுபவத்தில் இருந்தே அடுத்த முறைக்கும் உபயோகப்படுத்தலாம்.
  • எவர் மீதும், எதன் மீதும், எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும் ‘பொறாமை’ கொள்ளாமல் இருப்பது.
  • அன்பு, பரிவு, கருணை செலுத்துவதில் எந்த வித வேறுபாடும் இல்லாமல் எல்லோரிடத்திலும் ஒன்று போல செலுத்துவது. ஒருவனது பழகும் முறை அவனது பண்பாட்டைப் புலப்படுத்தும். ஒருவன் பிறரோடு பழகும் முறையிலிருந்து அவன் எத்தகைய பண்பாட்டை உடையவன் என்பதைத் தீர்மானிக்கலாம் அல்லது அறிந்து கொள்ளலாம். நல்ல பண்புகள் உடைய ஒருவன், எல்லோரிடமும் எளிமையாகப் பழகக் கூடிய தன்மை உடையவன். எனவே எல்லோரிடத்திலும் எளிய முறையில் பழகும் தன்மையினால் பண்பு உடையவராக வாழும் நல்வழியை எளிதில் அடையலாம் என்கிறார்வள்ளுவர்.

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு

  •  விட்டு கொடுத்து போவது.
  • எந்த நேரத்திலும் சிறிது நேரம் கொடுத்து யோசித்து பதில் சொல்வது.
  • எந்த பதிலையும் அடுத்தவர் நிலையில் இருந்து புரிந்து பதில் சொல்வது.

Leave a comment