“யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும் நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும், புதுவது அன்றே; வாழ்தல்,
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப் படூஉம் புனை போல், ஆர் உயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே. “
இது புறநானூற்றிலிருந்து எடுக்கப்பட்டது. மேலே உள்ள பாடலை கார்த்திக் குருமூர்த்தி இப்படி புரிந்துகொள்கிறார்.
எந்த ஊரு போனாலும் அது என் சொந்த ஊரு மாதிரிதான், நான் பாக்குற எல்லாருமே எனக்கு சொந்தக்காரங்க மாதிரிதான். எனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், அது வேற யாரோ செய்ததால வந்ததில்ல. வலி வந்தாலும், அது குறைஞ்சாலும், அதுவும் தானா நடக்குறது, யாரோ காரணமா இருந்து நடக்குறதில்ல. சாவு? அது ஒரு பெரிய அதிர்ச்சி விஷயம் இல்ல, அது வெறும்… இயல்பான ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்.
“ஆஹா, வாழ்க்கை அருமையா இருக்கு!”-னு நாம ரொம்ப சந்தோஷப்பட்டு துள்ளிக் குதிக்கிறதும் இல்ல. அதே மாதிரி, எதாவது தப்பா போனா, “ஐயோ வாழ்க்கை மோசமா இருக்கு”-னு உட்கார்ந்து அழுதுக்கிட்டும் இருக்கிறதில்ல.
இதை ஒரு சின்ன தெப்பம் பெரிய ஆத்துல மிதக்குறது மாதிரி நினைச்சுக்கோங்க — மழை கொட்டுது, மின்னல் வெட்டுது, தண்ணி பாறைமேல மோதி இரைச்சல் போடுது — அந்த தெப்பம் தண்ணி எங்க இழுத்துக்கிட்டு போகுதோ அங்க போயிக்கிட்டே இருக்கும். நம்ம வாழ்க்கையும் அப்படித்தான். நமக்கு எது நடக்கணுமோ அந்த வழியில நாமளும் ஓடிக்கிட்டே இருப்போம்.
இதை நல்லா புரிஞ்சுக்கிட்டா, “பெரிய மனுஷன்”-னு பணக்காரங்க, அதிகாரம் உள்ளவங்களைப் பாத்து நாம பிரமிச்சு போறதும் இல்ல, குறைவா இருக்குறவங்களை, சாதாரணமா இருக்குறவங்களை நாம கீழா பாக்குறதும் இல்ல. எல்லாருமே ஒரே ஓட்டத்துலதான் போயிட்டு இருக்காங்க.
சுருக்கமா சொன்னா — இது ரொம்ப பழைய, ரிலாக்ஸான ஒரு பார்வை: “நாம எல்லாரும் ஒன்னுதான், வெற்றி வந்தா தலைக்கேறவும் வேண்டாம், தோல்வி வந்தா சோர்ந்துபோகவும் வேண்டாம், யாரையும் அவங்க அந்தஸ்த வெச்சு மதிப்பிடவும் வேண்டாம்.
Leave a comment